Monday, January 26, 2009

தொடரும் நட்பில்.......அளவு கோள்!

தோன்றிய பொழுது எல்லாம்
தொலைபேசியை சுழற்றி
தொன தொன என்று
பேசிய நாட்கள்
உன் திருமணத்துக்கு
பிறகும் ……
தொடருமா? என்று
கேட்டதற்கு …
நட்புக்கு முற்று புள்ளி இல்லை
ஆனால்
அளவு கோள் உண்டு
என்று நீ கூறிய
வார்த்தை மட்டும்
இன்று என் வசம்!

தோழமையுடன்,
உன் தோழன்.

Wednesday, January 21, 2009

குரல் கேட்காதா ?

எழுந்துவிட்ட அதிகாலை,

எழுப்பிவிட்ட கடிகாரம்,

காத்திருக்கும் கடமை,

இன்னும் உறங்கும் நண்பன்,

சர்க்கரை அதிகமாய் என்று
கேட்டு வாங்கி குடிக்கும் வீட்டு முற்றத்தின் கடைத்தேநீர்,

இயந்திரம் தந்த இதமான வெந்நீர்,

விரும்பிய இசைபாடும் குறுவட்டு,

சுகமாய் பயணிக்க காத்திருக்கும் வாகனம்,

இரவு சந்திப்போமா என்ற ஏக்கத்துடன் படுத்திருந்த மெத்தை,

எனக்கென்றே காத்திருக்கும் வாழ்வின் புத்தம் புது நாள்,

இத்தனை இருந்தும் ஏதோ இழப்பதாய் உணர்வு,

இரவு எப்போது வரும் என்று ஏங்குகிறேன்,

நாளைய காலையின் விழிப்பிலாவது

தாயின் , “மணி எட்டு ஆச்சு இன்னும் தூக்கத்த பாரு” எனும் குரல் கேட்காதா

என்ற எதிர்பார்ப்போடு…..



இங்ஙனம்,
பாசத்தைக்கூட தவணை முறையில் பெறும்,

மென்பொருள் வல்லுனன்.

Wednesday, January 14, 2009

என் காதலே!.......என் காதலே!!

குட்டி குட்டி கோபங்கள்
சின்ன சின்ன சண்டைகள்
ரசிக்கவைக்கும் ஊடல்கள்
ஏங்க வைக்கும் கொஞ்சல்கள்
மிஞ்சவைக்கும் கெஞ்சல்கள்..
இன்னும் எத்தனை எத்தனை
இன்பம் வைத்திருக்கிறாய்
என் காதலே... ? !

Saturday, January 10, 2009

அப்பா....

ஆயிரம் முறை
தலைவாரிய
சந்தோஷம்...
அப்பா
ஒரேயொருமுறை
தலை கோதிவிடும்
போது!!

மனசுக்குள்
லேசாக பதறினாலும்
எது காட்டிக்கொடுக்கிறது
அப்பாவிற்கு மட்டும்????

ஒரே பார்வையில்
நானிருக்கிறேன் உனக்கென்று
உணர்த்த எப்படி முடிகிறது
அப்பாவிற்கு மட்டும்???

இத்துனை புரிதலும்
பரிவான பாசமும்
காட்டுகிறாயே...
எந்தப் பாசப்படியை
கொண்டு அளந்து
பார்ப்பேன்..?

அளந்திடத்தான் முடியுமா
அப்பா காட்டும் அன்பை!!!

-----

நண்பர் 'நட்புடன் ஜமாலின்' வேண்டுகோளுக்கு இணங்க.......என் வலைதளத்தில் 'என் வசம் ....நானில்லை' தொடர் கதைக்காக எழுதிய கவிதையை இங்கே பகிர்கிறேன்.

Monday, January 5, 2009

பொத்தி வைச்சிருக்கிறேன்.....பத்திரமாய்!!

சிரித்துக்கொண்டே நீ பேசிய
நம் முதல்
தொலைபேசி உரையாடல்.......

அழகான வரிகளோடு
மின்னஞ்சலில் நீ
அனுப்பிய வாழ்த்து அட்டைகள்...

வார்த்தைகளை தேடிபிடித்து
ஆறுதலாக எழுதின
உன் கவிதை தொகுப்புகள்....

என் வெக்கத்தைப் பற்றி
கவி எழுதி என்னை
வெட்கப்பட வைத்த வரிகள்....

நேரம் போவதறியாது
விரல்கள் வலிக்க வலிக்க
டைப்படித்த நீண்ட நேர அரட்டைகள்..

அவசரத்தில் அனுப்பிய மின்னஞ்சல்,
யோசித்து யோசித்து
எழுதியனுப்பிய நீண்ட இமெயில்கள்.......

என நமக்குள் நடந்தது
அனைத்தையும் பொத்தி பொத்தி
வைத்திருக்கிறேன் என் காதல் கருவறையில்!!!