Saturday, February 21, 2009

தேடல்!

மீண்டும் பிரம்மச்சாரி
ஊர் கேட்க கத்தினேன்
நீ உன் பிறந்தகம் போன
அந்தக் கணத்தில்

உன் உத்தரவில்லா
உலகத்துள்
என் ஒருத்தனின் ராஜாங்கம்

தாமதமாய் விடியல்
பல் துலக்காமல் தேநீர்
ஆஷ் டிரேக்கு வெளியே
அணையாத சிகரெட் துண்டு
நண்பர்கள்
மதுக்கோப்பை
இறைச்சியின் எச்சம்

எல்லாமே
நான் மகிழ்ந்த கதை பேசின

பளீரென்று சிரிக்கும் பூ
பையப் பைய
வாடுதல் போல
என் அத்தனை உற்சாகமும்
ஓய்ந்து தீர்ந்தது
ஓரிரு நாளிலேயே

வீடு வெற்றிடமாய்
வெற்றிடமெல்லாம் நீயாய்
தெரிய
உன்னை நினைத்து நினைத்தே
வாழ்க்கை
சராசரிக்கும் கீழாய்
சரியத் தொடங்கியது

காமமாம்
இச்சையாம்
நான் உன்னை வேண்டுவதன்
காரணம் சொல்கிறான்
உளவியல் படித்த
நண்பன்

எவருமே உணரமுடியாத
என் உள்ளாடும்
தவிப்பை
எங்ஙனம் சிருஷ்டிப்பது
வார்த்தைகளாய்?

மிக நீண்ட பிரயத்தனத்திற்குப்
பின் சொல்கிறேன்
தெருப்புழுதியில்
வெகு நேரம் விளையாடி
அம்மா நினைவு வந்தவுடன்
ஓடி வரும் குழந்தையாய்
உன்னைத் தேடுகிறேன் போ...!

Writer:Unkown

Wednesday, February 11, 2009

கனவில் அரங்கேறிய..... 'இல்லறம்'!!!

காலையில்...
நீ அலுவலகம் சென்றதும்
உன் செல்பேசி அழைப்புக்காக
நாளெல்லாம் காத்திருப்பேன் நான்..
வேலையில் மறந்து விட்டேன் என்பாய் நீ!


மாலையில்...
உன்னிடம் பகிர
சின்ன சின்ன சேதியுடன்
காத்திருப்பேன் நான்...
முழுவதும் கேட்காமல்
அவ்வளுவு தானே என தேநீர் பருகுவாய் நீ!


உனக்காகவே புத்தாடை
உடுத்தி நிற்பேன் நான்...
என்னை ரசிக்காமல்
தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்ப்பாய் நீ!


உன்னிடம் கோபம் கொண்டு
பேசாமலிருப்பேன் நான்
கண்டுக்கொள்ளாமல்
வலைதளங்களில் ஆழ்ந்திருப்பாய் நீ!


இரவில்....
உனக்கான என் கனவுகளுடன்
கண் மூடிக்கொண்டிருப்பேன் நான்...
தட்டி எழுப்பாமல்
மெளனமாக என்னுடன் பேச ஆரம்பிப்பாய்...
'அந்த' கணம்
அந்தனை குறைகளையும்
நிறைவாக்கி விடுகிறாயே
என் செல்ல திருடா!!