Monday, August 25, 2008

காதல் தோற்குமா??

எப்படி முடிந்தது ?
என்று முறிந்தது ?
நமக்குள் பிளவும்
தொடர்புக்கு முற்றுப் புள்ளியும்
உண்டானது நிஜமா?

மனசுக்குள் நினைவுகளும்
நினைவுகளின் அலைகளும்
என்றாவது அடங்குமா?
கண்களால் பரிமாறிக் கொண்டதும்
விரல்களால் உணர்ந்ததும்
உதடுகளால் எதிரொலித்ததும்
அழிந்தா போய்விடும் ?

நேற்று மனனம் செய்தது மறந்தாலும்
நீ காற்றுவாக்கில் பேசியது கூட
இன்னும் மனதில் அழியாமல்
கனன்று கொண்டிருப்பதை அறிவாயா?

நீயும் நானும்
தூரங்களால் விலகியிருக்கலாம்...
துயரங்களால் திசைமாறியிருக்கலாம்..
சந்தர்ப்பதால் பிரிந்திருக்கலாம்..
ஆனால்...
காதல் என்றசொல் காதில் விழுந்தால்
உன் முகம் கண்முன் வந்து போவதை
தவிர்க்க முடியவில்லை...

எனக்கென உன்னோடு நான்
மனசுக்குள் வாழ்வதை
தவிர்க்க நினைக்கவுமில்லை...
ஆம்..
காதலர்கள் தோற்கலாம்....
காதல் தோற்ப்பதில்லை....

-சுடர்விழி

Saturday, August 23, 2008

என் மனதில் நீ

மழை சிந்தும் வேளையில்
உன் கைகளில் மழை ஏந்து...
எந்த அளவு துளிகளை சேர்கிறாயோ
அந்த அளவு
நான் இருக்கிறேன் உன் மனதில்....
எந்த அளவு
துளிகளை சிதறுகிறாயோ அந்த அளவு
நீ இருக்கிறாய் என் மனதில்.....


-நட்சத்திரா

நேசிப்பு...

நேசிப்பும் சேமிப்பும்
ஒரு வகையில் ஒன்றுதான்
அளவு கூடினால் பகைமை
குறைந்தால் வருமை
அளவோடு நேசி
நட்புக்காற்றை சுவாசி
இந்த கவிதையை வாசி
சரியா தவறா என யோசி...


எழுதியவர்,
நட்சத்திரா.

Saturday, August 16, 2008

உன் நினைவுகளில்...

மின்னும் உன்
புன்னகையால்
என் கவலைகள்
கலைந்து போவதில்

பணிவான உன்
பாசத்தால் என்
தந்தையில்லா சோகம்
மறந்து என் மனம்
குழந்தையாவதில்...

இதைவிட
சின்ன சின்ன குறும்புகளில்

செல்லச்
சண்டைகளில்

கொஞ்ச நேர
மெளனங்களில்

கூடி சேரும்
பொழுதுகளில்

இடைவிடாத
உன் நினைவுகளில்...

இப்படி ஏதாவது
ஒன்றில் தினமும் நீ

இந்த உலகில் நானும்
அனாதை என்பதை
மறக்கடித்துவிடுகிறாய்.

Thursday, August 14, 2008

பாதை அறியாப் பாதங்கள்

உணவை மறந்தேன்,
உடலை மறந்தேன்,
உள்ளிருந்து அழும்
உயிரோசையை மறந்தேன்.
காலத்தை மறந்தேன்,
கண்களை மறந்தேன்,
கண்மணிக்குல் ஒளிந்திருந்தக்
கணவையும் மறந்தேன்.

காற்றுக்குக் கூட
கட்டுப் படாத நான்,
கார்ட் போர்டால் ஆன
க்யூபிக்கலுக்குள் கட்டப்பட்டேன்.

தாய்ப்பாசம் கூடத்
தவணை முறையில் தான்
தினமும் பில் எகிற
தடவிக்கொண்டே செல் ஃபோனில்
சும்மா நச்சூன்னு இருந்தது
சூப்பர்வைசரின் ஈ- மெயில்.
“லீவ் அப்ரூவ் ஆயிடுச்சுடா மாமு..”
லேட்டஸ்ட் நியூஸ் செல்லில் பறந்தது.

எப்ப போகலாம், எப்ப போகலம்
என்ற படி இளித்தது…
எப்பவோ திறந்து போடப்பட்ட
என்னுடைய ‘ட்ராவல் பேக்’.
எப்படி மறக்க முடியும்,
எகிறி குதித்து விளையாடிய
என் வீட்டு முற்றத்தை,
எதிர் வீட்டு தின்னையை.
படுத்துறங்கிய தாய் மடியை,
பட்டம் விட்ட மாடியை…
பாசத்துடன் வளர்த்த நாயை
பக்கத்து வீட்டு ஜன்னலை.

‘ஏய் எரும!ஏன்டா இத்தன நாள்?
என்னடா வாங்கிட்டு வந்த..?’
எனப்பாசமுடன் வினவும்
என் உடன் பிறப்புகள்…
எப்படி தம்பி இருக்க? என
எட்டி வந்து கேட்கும்
எதிர் வீட்டுக் குடும்பத்தார்.
என்மீது இவ்வளவு அக்கறை.?
ஒரே ஒரு நாள் கூட
ஒரு நிமிடம் போலிருந்தது.
ஓடிப்போனதே தேரியவில்லை
ஒரு வார விடுமுறை.

கண்முன்னாடியே நிற்கிறாள் இன்னும்.
கையசைத்த படி நின்ற அம்மா.
டெபிட் கார்டே வைத்திருக்கும் எனக்கு
டிக்கட் வாங்கி வழியனுப்பிய அப்பா.

மறுநாள் காலை…
மீண்டும் கேன்டீன் சாப்பாடு,
மாட்டேன் என்றது
மறத்துப் போன என் நாக்கு.
அப்போது தான் உறைத்தது
அட்டுப் போன என் மனதுக்கு
நான் மறந்தது,
உணவை மட்டுமல்ல
உணர்வையும் சேத்துத்தான் என்று!
—————————————————
இப்படிக்கு என்றும் உங்கள்,
முகவரியோடு
முகத்தையும் சேர்த்து
மாற்றிக்கொண்ட
மென் பொருள் வள்ளுனர்களில் ஒருவன்.
—வெரொனிக்.

Wednesday, August 13, 2008

Sunday, August 10, 2008

சந்திக்காமலே இருந்திருக்கலாம்.....

நான் நானாகவே
இருந்திருக்கலாம்

நீ நீயாகவே
இருந்திருக்கலாம்

எனக்கு நீயும்
உனக்கு நானும்
யாரோ என்றே
வாழ்ந்திருக்கலாம்

நான் உன்
எழுத்துக்களை
ரசிக்காமல்
போயிருந்தால்

நீ என்னை
நட்போடு
பார்க்காமல்
போயிருந்தால்

இப்படி அன்பில்
திளைத்து
ஒன்றுக்குள் ஒன்றாக
நட்புடன் பழகிவிட்டு

ஒவ்வொன்றாக வலியோடு
பிரியாமல் போயிருப்போம்.

Friday, August 8, 2008

தந்தையும் நானும்..

பார்த்து பார்த்து
தேந்தெடுத்த உடைகள்..
பத்தியமாய் செய்த உணவு..
பார்த்து மகிழ
தொலைக்காட்சி, இணையம்
இன்னும் பிற..
இறுமாப்புடன் கேட்டேன்
தந்தையை பார்த்து,
இன்னும் என்ன வேண்டும்
உங்களுக்கு?
"எனக்காக நீ செலவிடும் நேரம்"
இடியாய் வந்திறங்கியது
பதில்.

- இலட்சுமி சுந்தர்