Monday, September 29, 2008

காதலிடம் யாசிக்கிறேன.....!

உனக்கு பிடிக்காது என்பதால்
நான் இழந்தவைகளும் ....
எனக்கு பிடிக்கும் என்பதால்
நீ கற்றுக்கொண்டவைகளும் மட்டுமே
நம் காதலை வலுப்படுத்தவில்லை...

நமக்கான வாழ்வின்
பரஸ்பர நம்பிக்கையும் - புரிதலுமே
நம் காதலை மேலும் அழகாக்கியது...

எனக்கான உன் தவிப்பும்...
உனக்கான என் அக்கறையும்...
நம் காதலை இன்னும் மெருகேற்றுகிறது...

உன் மீதான என் பொய் கோபமும்
என் மீதான உன் பொய் சண்டையும்
நம் காதலை இன்றும் வாழவைக்கிறது...


இப்படியே தொடரும் நம் காதலில்
உன் மடி மீது
என் உயிர் பிரியும்
வரம் வேண்டி
நம் காதலிடம் யாசிக்கிறேன்!

-
எழுதியவரின் பெயர் தெரியவில்லை.

Friday, September 12, 2008

அம்மா நீ எங்கே?

வான் இருக்கும்
வட்ட நிலா
தேன் தர
கிட்ட வரச்சொல்லி
உணவூட்டிய உன்
கைகள் எங்கே?

பூமி தொடும் புடவைதனை
பாதி தூக்கி மீதியில்
எனைத் தாங்கி
நீராட்டிய உன்
கால்கள் எங்கே?

கல்யாணம் காதுகுத்து
புதுமனைப் புகுவிழா
பூப்புனித நீராட்டு விழா
எங்கு சென்றாலும்
எனக்கென உனக்களித்த
இனிப்பினை இடுப்பில்
முடிந்து எடுத்து வருவாயே
இன்று எங்கே நீ?

அடுத்த வீட்டுப் பையன்
மண்டை உடைத்து
ஒன்றும் அறியாப் பிள்ளையாய்
‘ அடிக்கதம்மா அப்பாகிட்ட
சொல்லிடாதம்மா ‘
என்று பதுங்கி பதுங்கி
என் முகம் மறைத்த
உன் முந்தானை எங்கே?

அம்மை பார்த்து
வெம்மை பூத்து
விம்மி நான் அழுதபோது
வேப்பிலை விசிறி
உடனழுத உன்
கண்கள் எங்கே?

காய்ச்சல் வந்து
கடும் குளிரில்
கண்ணயர்ந்து நான் தூங்க
கட்டிலருகே கண்விழித்து
கண் துயிலாதெனக்கு
மருந்தூட்டிய மாசில்லாத
உன் முகமேங்கே?

பார்த்துப்போ பார்த்துப்போ
எனப் பலநூறு முறை
பாசமுடன் கூறுவாயே
பத்து நாள் கழித்துப் பார்த்தாலும்
‘என்னடா இப்படி இளைச்சுப்போயிட்ட’
என்று ஏங்குவாயே
எங்கே அந்த ஏக்கம்?

உன் விரல் பிடித்து
ஊர்வலம் வரவேண்டும்
உள்ளன்போடு நீ ஊட்டும்
உணவு வேண்டும்
தலைசாய உன் மடி வேண்டும்
தலைகோத உன் விரல் வேண்டும்

கண்ணயர்ந்து நீ தூங்க
உன் கால் பிடித்து விடவேண்டும்
அதிகாலையில் எழுந்து
காபியுடன் உனை எழுப்ப வேண்டும்

பின்னிருக்கையில் உனையமர்த்தி
அமர்க்களமாய் ஊர் சுற்ற
ஊர்தி வேண்டும்
பாலூட்டிய உனக்கு நான்
பாசமுடன் சோறூட்ட வேண்டும்

பழைய துணி அணியும் உனக்கு
பட்டுத்துணி பரிசளிக்க வேண்டும்
உன்னோடிருக்கும் புகைப்படமொன்று
உன்னுயரத்தில் என்னறையில் வேண்டும்

என்மடி மேல் உனை வைத்து
தாலாட்டிக் காலாட்ட வேண்டும்
பெரியதாய் வீடு கட்டி
பெற்றவளே! அதற்கு உன்
பெயர் சூட்ட வேண்டும்

பத்துத் திங்கள் வயிற்றிலும்
பலநூறு திங்கள் மனதிலும்
மாறி மாறி சுமந்த
உன் சுமை இறக்க வேண்டும்

மங்கலான பார்வைக்கு
தங்க முலாமிட்ட
மூக்குக் கண்ணாடி வேண்டும்

மூப்பால் முக்தியடைந்த
உன் பற்களுக்கு பதிலாய்
செயற்கை பல் பொருத்த வேண்டும்

நான் பிடித்து நடந்த
உன் கைகளுக்கு தங்கத்தில்
வளையல்கள் வேண்டும்
என் குரலைக்கேட்டு களித்த
உன் காதுகளுக்கு வைரக்கம்மல் வேண்டும்

பட்டது போதுமாம்மா
நீ இது வரை…
நீ இட்டதம்மா என் வாழ்க்கை

பார்த்துக்கொள்வேன் இனி உனை
என் பிள்ளை போல் என்றென்றும்
ஏக்கம் வேண்டாம்
தூக்கம் கொள் நிம்மதியாக…

-
எழுதியவர் கவிஞர் சரவணன்.

Monday, September 8, 2008

ஏன்?

அப்போது..
நான்
கவிதையெழுதி
காதலிக்கவில்லை
அவனை

மனித மந்தைகளின்
சூட்சம வலையில்
சிக்கிதவித்த போது
தந்தையின் வாசத்தை
அவன் மடியில் உணர்ந்து
என்
எண்ணக்குதிரையை
எனக்கே அரியாமல்
விரட்டியடித்து,

வெற்றியின் சுவையை
அரியவவைத்தவன்
அவன்..

கனவு என்பதை
கவிதையாக
காணச்செய்தவன்…

புள்ளியில் தொடங்கி
அழகான கோலத்தில்
முடிக்கும் திறமையை
சிற்பியாக இருந்து
செதுக்கி ரசித்தவன் அவன்…

வெயிலின் அருமையை
வெயிலில்லேயே உணரச்சொன்னவன்..
கொட்டும்
ஒற்றை மழைத்துளியை
கயிரெனக்கொண்டு
வானமடையும் வித்தையை
சொன்னவன்..

என் மூச்சே
அவனென்றிருக்க
ஒருநாள்
அவன் சுவாசிப்பதை
நிறுத்திக்கொண்டான்..

ஏன்? எதனால்?
என்று அறியும்
தைரியமில்லாமல்
காலத்தின்
கட்டளையாக
அவனின்
எண்ணக்குதிரையில்
பயணித்துக்கொண்டு…
கவிதைகளும் எழுதுகின்றேன்
இப்போது...

Wednesday, September 3, 2008

ஏதேதோ...நினைவு!

எங்கெங்கோ.....
பிறந்தோம்!

எங்கெங்கோ
வளர்ந்தோம்!

ஆயினும் நாம்
ஒன்றாக பயணித்த
சில நினைவுகள்.....!

தினம் தினம்
வந்து போகின்ற
பேருந்து வரலாம்
வராமல் போகலாம்
வழித்தடமும் மாறலாம்
ஆனால்

நீ மட்டுமே.....
வந்து வந்து போன
சில நினைவுகள்.....!
மனம் விட்டு
பேசிய சில வார்த்தைகள்
வாய்விட்டு சிரித்த
சில நேரங்கள்

உதட்டளவு உறவினை
உதறித் தள்ளிவிட்டு
உள்ளத்தளவில்
உறவினை வளர்த்து
உயிர் வாழ்வோமெனச் சொன்ன
உன் நினைவுகளால்.....!

மறக்க முடியாத
உறவுகளைச் சுமந்து
ஊனமாய் போன உடம்புடன்
நான் மட்டும்
நித்திரை இல்லாத
நினைவுகளோடு.....
இன்னும்