Tuesday, November 25, 2008

'தாய்' - சிறுகுறிப்பு வரைக

மழையில் நனைந்துகொண்டே
வீட்டுக்கு வந்தேன்
'குடை எடுத்துட்டுப்
போக வேண்டியதுதானே'
என்றான் அண்ணன்
'எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்க வேண்டியதுதானே'
என்றாள் அக்கா
'சளி பிடிச்சுக்கிட்டு
செலவு வைக்கப்போற பாரு'
என்றார் அப்பா
தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்ல;
மழையை!"

-
மின்னஞ்சலில் நண்பன் பகிர்ந்துக்கொண்ட கவிதை

Wednesday, November 19, 2008

ஓர் இரவு.....போதுமா??

இரவெல்லாம்
பேச வேண்டும்,
கனவுகளை,
கண்ணீரை,
கவிதையை,
ஏமாற்றத்தை,
எழுச்சியை,
துயரத்தை…..
எல்லாவற்றையும்..
ஊர் உறங்கிப்போன பிறகும்
உன்னை கேட்டபடி நானோ..
என்னை கேட்டபடி நீயோ…
நெட்டி தள்ளும்
உறக்கத்தோடு
நான்
உன் மடியிலோ
நீ
என் மடியிலோ
கண்ணயர வேண்டும்…
காலமெல்லாம் இது வேண்டும்!!!

Tuesday, November 11, 2008

உன்னாலே !.....உன்னாலே !

நீ எழுதுவதாலேயே ...
நான் உன் கவிதைகளை படித்தேன் !

நீ எதைப்பற்றி எழுதினாலும் ...
அது என்னைபற்றித்தான் என்று நினைத்தேன் !

ஓர் நாளாவது ...
உன் எழுதுகோளாக மாட்டேனா என்று தவித்தேன் !
அட அந்த தாளாகவாவது ,
என்னை நினைத்துக்கொள்ள மாட்டாயா என்று துடித்தேன் !

உன் நினைவுகள் ...
என்னை வாட்டுவதை நானே கொஞ்சம் ரசித்தேன் !
உன்னாலேயே ...
நான் இந்த கவிதையை எழுதி முடித்தேன் !

Wednesday, November 5, 2008

என் கனவுலகில்.....

நம் இருவருக்கான உலகம் இது...
இங்கு விடியலே இல்லை...
இரவு மட்டும் தான் ...
இருபத்தி நான்கு மணிநேரமும்...

நான் காத்துக் கொண்டிருப்பேன்...
தங்களின் வருகைக்காக...
கனவுகளில்...!!
காலமெல்லாம் நான் ரசிக்கும் தங்கள்...
முகத்தைப் பார்த்துக் கொண்டேயிருப்பேன்!
சமைப்பேன், துவைப்பேன், துடைப்பேன்...
என் கனவுலகில்...
தங்கள் இல்லத்தரசியாய்!!!

என் கவிதைகளைக் கொடுப்பேன்...
உங்கள் விமர்சனத்தைக் கேட்பேன்...
உங்கள் கவிதைகளை படிப்பேன்...
ரசிப்பேன்...

நம் இருவருக்கான இந்த உலகம்...
எப்போதும் இரவாகவே இருக்கட்டும்...
விடியவே வேண்டாம்...!!

Monday, September 29, 2008

காதலிடம் யாசிக்கிறேன.....!

உனக்கு பிடிக்காது என்பதால்
நான் இழந்தவைகளும் ....
எனக்கு பிடிக்கும் என்பதால்
நீ கற்றுக்கொண்டவைகளும் மட்டுமே
நம் காதலை வலுப்படுத்தவில்லை...

நமக்கான வாழ்வின்
பரஸ்பர நம்பிக்கையும் - புரிதலுமே
நம் காதலை மேலும் அழகாக்கியது...

எனக்கான உன் தவிப்பும்...
உனக்கான என் அக்கறையும்...
நம் காதலை இன்னும் மெருகேற்றுகிறது...

உன் மீதான என் பொய் கோபமும்
என் மீதான உன் பொய் சண்டையும்
நம் காதலை இன்றும் வாழவைக்கிறது...


இப்படியே தொடரும் நம் காதலில்
உன் மடி மீது
என் உயிர் பிரியும்
வரம் வேண்டி
நம் காதலிடம் யாசிக்கிறேன்!

-
எழுதியவரின் பெயர் தெரியவில்லை.

Friday, September 12, 2008

அம்மா நீ எங்கே?

வான் இருக்கும்
வட்ட நிலா
தேன் தர
கிட்ட வரச்சொல்லி
உணவூட்டிய உன்
கைகள் எங்கே?

பூமி தொடும் புடவைதனை
பாதி தூக்கி மீதியில்
எனைத் தாங்கி
நீராட்டிய உன்
கால்கள் எங்கே?

கல்யாணம் காதுகுத்து
புதுமனைப் புகுவிழா
பூப்புனித நீராட்டு விழா
எங்கு சென்றாலும்
எனக்கென உனக்களித்த
இனிப்பினை இடுப்பில்
முடிந்து எடுத்து வருவாயே
இன்று எங்கே நீ?

அடுத்த வீட்டுப் பையன்
மண்டை உடைத்து
ஒன்றும் அறியாப் பிள்ளையாய்
‘ அடிக்கதம்மா அப்பாகிட்ட
சொல்லிடாதம்மா ‘
என்று பதுங்கி பதுங்கி
என் முகம் மறைத்த
உன் முந்தானை எங்கே?

அம்மை பார்த்து
வெம்மை பூத்து
விம்மி நான் அழுதபோது
வேப்பிலை விசிறி
உடனழுத உன்
கண்கள் எங்கே?

காய்ச்சல் வந்து
கடும் குளிரில்
கண்ணயர்ந்து நான் தூங்க
கட்டிலருகே கண்விழித்து
கண் துயிலாதெனக்கு
மருந்தூட்டிய மாசில்லாத
உன் முகமேங்கே?

பார்த்துப்போ பார்த்துப்போ
எனப் பலநூறு முறை
பாசமுடன் கூறுவாயே
பத்து நாள் கழித்துப் பார்த்தாலும்
‘என்னடா இப்படி இளைச்சுப்போயிட்ட’
என்று ஏங்குவாயே
எங்கே அந்த ஏக்கம்?

உன் விரல் பிடித்து
ஊர்வலம் வரவேண்டும்
உள்ளன்போடு நீ ஊட்டும்
உணவு வேண்டும்
தலைசாய உன் மடி வேண்டும்
தலைகோத உன் விரல் வேண்டும்

கண்ணயர்ந்து நீ தூங்க
உன் கால் பிடித்து விடவேண்டும்
அதிகாலையில் எழுந்து
காபியுடன் உனை எழுப்ப வேண்டும்

பின்னிருக்கையில் உனையமர்த்தி
அமர்க்களமாய் ஊர் சுற்ற
ஊர்தி வேண்டும்
பாலூட்டிய உனக்கு நான்
பாசமுடன் சோறூட்ட வேண்டும்

பழைய துணி அணியும் உனக்கு
பட்டுத்துணி பரிசளிக்க வேண்டும்
உன்னோடிருக்கும் புகைப்படமொன்று
உன்னுயரத்தில் என்னறையில் வேண்டும்

என்மடி மேல் உனை வைத்து
தாலாட்டிக் காலாட்ட வேண்டும்
பெரியதாய் வீடு கட்டி
பெற்றவளே! அதற்கு உன்
பெயர் சூட்ட வேண்டும்

பத்துத் திங்கள் வயிற்றிலும்
பலநூறு திங்கள் மனதிலும்
மாறி மாறி சுமந்த
உன் சுமை இறக்க வேண்டும்

மங்கலான பார்வைக்கு
தங்க முலாமிட்ட
மூக்குக் கண்ணாடி வேண்டும்

மூப்பால் முக்தியடைந்த
உன் பற்களுக்கு பதிலாய்
செயற்கை பல் பொருத்த வேண்டும்

நான் பிடித்து நடந்த
உன் கைகளுக்கு தங்கத்தில்
வளையல்கள் வேண்டும்
என் குரலைக்கேட்டு களித்த
உன் காதுகளுக்கு வைரக்கம்மல் வேண்டும்

பட்டது போதுமாம்மா
நீ இது வரை…
நீ இட்டதம்மா என் வாழ்க்கை

பார்த்துக்கொள்வேன் இனி உனை
என் பிள்ளை போல் என்றென்றும்
ஏக்கம் வேண்டாம்
தூக்கம் கொள் நிம்மதியாக…

-
எழுதியவர் கவிஞர் சரவணன்.