Wednesday, July 30, 2008

பிரியுமா......பிரியம்??

பிரியம் என்பது எளிதல்ல, குறிப்பாக
பிரிந்திருக்கும் தொலை தூரத்தில்.

சந்தேகங்களும் பயங்களும் சாதாரண உறவினிடை
கொந்தளித்துக் கொண்டிருக்கும் பிரிந்திருந்தால்...

இமைப்பொழுதில் உனை நினைக்கையில்
என்றுமில்லாத எதனையோ இழக்கின்றேன்...
உன் புன்னகையின் மெல்லினத்தை,
உன் அன்பின் ஆழத்தை,
உன் பாசமிகு கரத்தை!

உன்மேல் நான் கொண்ட அன்பு எத்துனை
வலிமையானது என்பதனை
உன்னிடம் நிரூபிக்க விடாமல் இந்த தூரமும்
என்னை தொந்தரவு செய்கிறது...

Wednesday, July 23, 2008

இனிய கவிதை....

அம்மா....

சுமையைச் சுகமாக்கி
சுமந்து சுகமடைந்தாய்
உதிரத்தை அமுதாக்கி
உயிரூட்டினாய்
பத்தியச் சோறுண்டு
பாதுகாத்தாய்

முதல் உறவாய்
முதல் குருவாய்
முதல் இறையாய்
நிறைந்தாய்

என் உணர்வே
உன் உயிராய்
என் உறவே
உன் உலகாய்
மா(ற்)றினாய

கைமாறில்லாக் கடனாற்றி
கடனாளியாக்கிவிட்டாய்
பாசம் பொழிந்து மழையானாய்
எனைக் காக்க நெருப்பானாய்
சிறகடிக்க விண்ணானாய

தன்னலமற்ற தாயே...
நீயின்றி நானில்லையே
ஆயிரம் உறவுகள்
கொண்டாலும்
உனக்கு இணை இல்லையே...


கடவுள் கண்முன் வந்தால்
கேட்பேன் ஒரே வரம்
"மீண்டும் உன் கருவறையில்
ஓர் இடம்"

Thursday, July 17, 2008

உன் நினைவுகள்....

உன் வரவினை
எதிர்பார்த்தே வாழ்ந்தவள்
இனிவரவும் இல்லை...
செலவும் இல்லை!


இனி நிறைய நேரமிருக்கும்
உன்னால் மறந்துபோன
என்னை நினைத்துக்கொள்ள
கண்கள் நனைத்துக்கொள்ள!


நீ சொல்லியோ
நான் சொல்லியோ
ஒன்றும் ஆகப்போவதில்லை
கிடக்கட்டும் என்னுள்
உன் நினைவுகள்
மட்டுமேனும்!

- எழுதியவரின் பெயர் நினைவில் இல்லை

Wednesday, July 16, 2008

அன்பு மகளே......கண்மனி!!

என் அன்பு மகளே...

என் விடியல்
என்றும் உனக்கானது...

என் உள்ளத்தின்
உற்சாகம்
உன் புன்னகையில்...

ஆனால் புதிதாகவும்,
நான் காணும்போது
புதிராகவும்
மறைக்கப்படும்
உன் நாணம்...

என்னுடனான
உன் நட்பு
இன்று
எல்லைகளுடன்...

நீ உதறிவிட்ட
என் நினைவுகள்
அனாதைகளாய்
என் முன்னே...

தனிமையில்
கனவுகள் காண்கிறாய்...
உறக்கம், உணவு
தொலைக்கிறாய்
உண்மை கேட்டால்
வெடிக்கிறாய்...

காதல் கனவுகளில்
காலத்தைத்
தொலைத்து விடாதே..
கானல் நீராக
காணாமல் போய்விடாதே...

காலச்சக்கரத்தில்
உண்மைக்காதல்
உன்னைத்தேடி வரும்...
வாழ்க்கைச்சக்கரத்தில்
தேடும்போது வாராது
இளமைப்பருவம்...

அன்னை என்
அழுகுரல்
கேட்கிறதா கண்மனியே???

-கவிஞர் மலர்

இணை பிரியா இணைய நட்பு !!!

என் கவிதை ரசனைக்கு
நவரசமாய் கிடைத்தது - ஒரு
இணைய நட்பு!

கவிதைக்கு மட்டுமில்லை
நண்பா! - கலங்கிடாதே
கண்ணுக்குள் மணியாய்
இணை பிரியா நட்பு
இந்த இணைய நட்பு!!

"கருத்து வேறுபாடு ஒன்றும்
தடையில்லை நம் நட்புக்கு!"
கிடைத்த உன் நட்பு எனக்கு
பொக்கீஷம்
கடவுளுக்கே என் முதல் நன்றி!

கவியில் இன்னும் நடைபழகும்
குழந்தைதான் நான்! - ஆனாலும்
காத்திருந்து கிடைத்த உன் நட்புக்கு
தந்தேன் கவிதையை பரிசாய் உனக்கு!

சண்டை போடவா
நம் நட்பு??
இல்லை
திட்டிக்கொள்ளவா? -
இரண்டுமே நம் நட்பினை வெளிப்படுத்த
நாம் கூறிக்கொள்ளும்
சாக்குபோக்கு!!

-திருமதி. அஸ்மா